< Back
மாநில செய்திகள்
மளிகை பொருட்களின் விலை கிடு, கிடு உயர்வு
வேலூர்
மாநில செய்திகள்

மளிகை பொருட்களின் விலை கிடு, கிடு உயர்வு

தினத்தந்தி
|
23 Aug 2023 11:30 PM IST

வேலூரில் மளிகை பொருட்களின் விலை கிடு, கிடுவென அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.170-க்கு விற்பனை ஆகிறது.

மளிகை பொருட்கள் விலை உயர்வு

வேலூர் மாநகராட்சி பகுதியின் முக்கிய வணிக மையமாக லாங்கு பஜார், நேதாஜி மார்க்கெட் திகழ்கிறது. இங்கு அரிசி, பருப்பு, வெல்லம், நவதானியங்கள், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான மளிகை பொருட்களின் குடோன் மற்றும் கடைகள் ஏராளமாக அமைந்துள்ளன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் விற்பனைக்காக கனரக வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன.

வேலூர் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மளிகை கடை வியாபாரிகள் அரிசி, மளிகை பொருட்களை மொத்தம் மற்றும் சில்லரை விலையில் வாங்கி செல்கின்றனர். அதே போன்று பொதுமக்களும் தங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை இங்கு வந்து வாங்குகிறார்கள். பொதுமக்கள் தினமும் சமையலில் பயன்படுத்தும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளது.

உச்சத்தில் துவரம் பருப்பு...

கடந்த சில வாரங்களாக துவரம், உளுந்து, கடலை பருப்புகளில் விலை கிலோவிற்கு ரூ.10 வீதம் உயர்ந்தது. குறிப்பாக துவரம் பருப்பு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ.140-க்கும் விற்கப்பட்ட துவரம் பருப்பு தற்போது ரூ.170-க்கு விற்பனையாகிறது. அதேபோன்று மிளகு, சீரகம் உள்ளிட்டவற்றின் விலையும் கிடு, கிடுவென அதிகரித்துள்ளது. அதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளது. பெரும்பாலான குடும்பத்தில் மாத பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. அதனால் சமையலுக்கு பயன்படுத்தும் மளிகை பொருட்களின் அளவு குறைந்துள்ளது. இந்த விலையேற்றம் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள மொத்தம் மற்றும் சில்லலை விற்பனை கடையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் கிலோவில் வருமாறு (கடந்த மாத விலை அடைப்புக்குறிக்குள்):-

துவரம் பருப்பு-ரூ.165 முதல் ரூ.170 வரை (ரூ.140 முதல் ரூ.150), உளுந்தம் பருப்பு-ரூ.130 (ரூ.110), கடலை பருப்பு-ரூ.90 (80), வேர்கடலை-ரூ.135 (ரூ.115), பொட்டுக்கடலை-ரூ.110 (ரூ.90), பாசிபருப்பு-ரூ.120 (ரூ.115), மிளகு-ரூ.750 முதல் ரூ.800 வரை (ரூ.700), சீரகம்-ரூ.760 (ரூ.650), திராட்சை-ரூ.250 (ரூ.220), ஏலக்காய்-ரூ.2,800 (ரூ.2,000), இலவம்பட்டை-ரூ.1,200 (ரூ.800), ஓமம் -ரூ.340 (ரூ.240), சோம்பு-ரூ.340 (ரூ.240), வெந்தயம்-ரூ.100 (ரூ.85), குண்டு மிளகாய் ரூ.300 (ரூ.270), சர்க்கரை -ரூ.42 (ரூ.40) விற்பனையாகிறது.

வரத்து குறைவு

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'தமிழகத்துக்கு பிறமாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருட்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு அந்த மாநிலங்களில் விளைச்சல் குறைவு காரணம் என்று கூறப்படுகிறது. அதனால் பருப்பு வகைகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மளிகை பொருட்களின் விலை கடந்த மாதத்தைவிட 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதேநிலை நீடித்தால் வரும்மாதங்களில் பண்டிகைகள் வரவிருப்பதால் மளிகைப்பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது' என்றனர்.

மேலும் செய்திகள்