நீலகிரி
காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
|கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் நேற்று காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குறைந்து கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் நேற்று காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குறைந்து கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
விலை உயர்வு
கோத்தகிரி மார்க்கெட்டில் வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.120, பச்சை மிளகாய் ரூ.110, இஞ்சி ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே மற்ற காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.70 வரை விற்ற பச்சை மிளகாய் நேற்று ரூ.110-க்கு விற்பனையானது.
இதேபோல் கடந்த வாரம் ரூ.30-க்கு விற்ற உருளைக்கிழங்கு ரூ.50-க்கும், கிலோ ரூ.35-க்கு விற்ற கத்தரிக்காய் ரூ.50-க்கும், ரூ.90-க்கு விற்ற பீன்ஸ் ரூ.140-க்கும், ரூ.50-க்கு விற்ற பாகற்காய் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கும், பீட்ரூட் ரூ.60-க்கும், கேரட் ரூ.80-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30-க்கும், முள்ளங்கி ரூ.40-க்கும், அவரை ரூ.80-க்கும், முட்டைக்கோஸ் ரூ.30-க்கும் விற்பனையானது.
வரத்து குறைவு
வழக்கமாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கோத்தகிரி மார்க்கெட்டில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க உள்ளூர் மக்கள், வட மாநிலத்தவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், காய்கறிகளின் விலை உயர்ந்து உள்ளதால், நேற்று மார்க்கெட்டில் பொதுமக்கள் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் கடைகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காட்சி அளித்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தொடர் மழை மற்றும் சீதோஷ்ண காலநிலை மாற்றத்தால் தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், இஞ்சி உள்ளிட்ட சில காய்கறிகளின் விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் மொத்த காய்கறி மண்டிகளுக்கு வரும் காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்து உள்ளது. மண்டிகளில் காய்கறிகளை வாங்கிச் செல்ல வெளிமாநில, உள்ளூர் வியாபாரிகள் இடையே போட்டி அதிகமாக உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகிறது. காய்கறிகள் வரத்து அதிகரிக்க தொடங்கிய பின்னர் தான் அதன் விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.
கடும் உயர்வு
பொதுமக்கள் கூறும்போது, சமையலுக்கு தக்காளி இன்றியமையாதது. அசைவ உணவுகள் தயாரிக்க தக்காளி, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் கண்டிப்பாக தேவை. ஆனால், அவற்றின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. எனவே, காய்கறிகள் வாங்கும் அளவை குறைத்து விட்டோம் என்றனர்.