< Back
மாநில செய்திகள்
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில் தக்காளி, சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு
சென்னை
மாநில செய்திகள்

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில் தக்காளி, சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.20 குறைவு

தினத்தந்தி
|
20 July 2023 12:46 PM IST

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தக்காளி, சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்திருந்தது.

சென்னை,

தக்காளி, சின்ன வெங்காயம் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்தது. இதனால் அதன் விலை தாறுமாறாக உயர்ந்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து இதுவரை கட்டுக்குள் வரவில்லை.

தக்காளி ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.140 வரை ஏற்ற இறக்கத்துடனேயே விற்பனை ஆகி வருகிறது. சின்ன வெங்காயத்தை பொறுத்தவரையில், யாரும் எதிர்பாராதவிதமாக இரட்டை சதம் அடித்தது. அதன் பின்னர் ஓரளவுக்கு விலை குறைந்தது.

இந்த நிலையில் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தக்காளி, சின்ன வெங்காயம் விலை நேற்று சற்று குறைந்திருக்கிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று முன்தினம் தக்காளி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.125 வரையிலும், நவீன் தக்காளி ரூ.140-க்கும் விற்பனை ஆனது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.110 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. இந்த விலையில் நேற்று சற்று குறைந்து காணப்பட்டது. கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்திருந்தது.

அதேபோல், சின்ன வெங்காயம் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை ஆனது. நேற்று விலை சரிந்து ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.160 வரை விற்கப்பட்டது. தக்காளி, சின்ன வெங்காயம் வரத்து ஓரளவுக்கு இருப்பதால், அதன் விலை சற்று சரிந்திருப்பதாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், மற்ற காய்கறியின் விலையும் நேற்று முன்தினத்தை விட நேற்று கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை குறைந்திருந்ததை பார்க்க முடிந்தது.

ஆனால் இஞ்சி விலை மட்டும் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது.

மேலும் செய்திகள்