நீலகிரி
சின்ன வெங்காயம் விலையும் கிடுகிடு உயர்வு
|ஊட்டியில் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி
ஊட்டியில் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவு
நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முள்ளங்கி, உருளைகிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், மேரக்காய் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல் சமவெளி பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம் நீலகிரிக்கு சரக்கு வாகனங்களில் உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் சமவெளி பகுதிகளில் தொடர் மழை பெய்வதால் விளைநிலங்களில் காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டது. விளைச்சலும் பாதிக்கப்பட்டது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் தக்காளி கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையாது. இதைத்தொடர்ந்து சின்ன வெங்காயம் விலையும் கிடுகிடுவென விலை உயர்ந்து உள்ளது.
சின்ன வெங்காயம்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனையாது. நேற்று ரூ.150 என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ரூ.110-க்கு விற்ற தக்காளி ரூ.130-க்கு விற்பனையானது. சில்லரை விற்பனை கடைகளில் இதிலிருந்து ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
ஊட்டிக்கு தினமும் 2,000 கிலோ தக்காளி கொண்டு வரப்படுகிறது. இதன்படி கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து 75 சதவீதமும், காரமடை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 25 சதவீதமும் கொண்டு வரப்படுகிறது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. சமவெளி பகுதியை விட நீலகிரியில் தக்காளி விலை குறைவாக தான் உள்ளது. ஆனால், சின்ன வெங்காயம் விலை அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
விலை விவரம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தக்காளி விலையை கேட்டால் தலை சுற்றுகிறது. வெங்காயம் விலையை கேட்டால் விழி பிதுங்குகிறது. அது மட்டும் அல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகமாகத்தான் உள்ளது. இதனால் குறைந்த அளவு காய்கறிகள் மட்டும் வாங்கி செல்கிறோம் என்றனர். மேலும் உழவர் சந்தையில் சற்று விலை குறைவாக இருப்பதாக அங்கு காய்கறிகளை வாங்கி வருகின்றனர்.
ஊட்டி மார்க்கெட்டில் மற்ற காய்கறிகள் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:-
வெண்டைக்காய்-ரூ.60, பெரிய வெங்காயம்-ரூ.30, அவரைக்காய்-ரூ.60, புடலங்காய்-ரூ.60, பீர்க்கங்காய்-ரூ.65, சுரைக்காய்-ரூ.30, பாகற்காய்-ரூ.80, பூசணிக்காய்-ரூ.30, அரசாணிக்காய்-ரூ.25, உருளைக்கிழங்கு-ரூ.60, கேரட்-ரூ.40, பீட்ரூட்-ரூ.42, முள்ளங்கி-ரூ.40, நூல்கோல்-ரூ.50, முருங்கைக்காய் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.