புதுக்கோட்டை
சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.150 ஆக உயர்ந்தது
|புதுக்கோட்டையில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.150 ஆக உயர்ந்துள்ளது.
கிலோ ரூ.150-க்கு விற்பனை
தக்காளி விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகரித்த நிலையில் தொடர்ந்து அதே நிலையில் உள்ளது. விலை இன்னும் குறையவில்லை. இதேபோல மளிகை பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. புதுக்கோட்டையில் ஒரு கிலோ தக்காளி சராசரியாக கிலோ ரூ.120-க்கு உழவர் சந்தையில் விற்பனையாகுகிறது. வெளி சந்தையில் கிலோ ரூ.130-க்கு விற்கிறது. இந்த விலையேற்றத்தில் இருந்து இன்னும் குறையவில்லை. இதற்கிடையில் வாரச்சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.100 ஆக உயர்ந்திருந்ததில் படிப்படியாக விலை அதிகரித்து வருகிறது. புதுக்கோட்டை உழவர் சந்தையில் கிலோ ரூ.150-க்கு நேற்று விற்றது.
பொதுமக்கள் அவதி
பெரிய வெங்காயம் கிலோ ரூ.30-க்கு விற்றது. பீன்ஸ் விலையில் மாற்றம் இல்லாமல் சதமடித்தப்படி கிலோ ரூ.100-க்கு விற்கிறது. இஞ்சி விலை கிலோ ரூ.300-ல் இருந்து குறையவில்லை. பூண்டு கிலோ ரூ.210-க்கு விற்கிறது. இதற்கிடையில் கருணை கிழங்கு கிலோ ரூ.110- ஆகவும் உயா்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வரத்து அதிகரித்து விலை எப்போது குறையுமோ? என பொதுமக்கள் எதிர்பார்த்தப்படி உள்ளனர்.