< Back
மாநில செய்திகள்
சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு

தினத்தந்தி
|
10 Nov 2022 12:15 AM IST

கோவையில் மழை காரணமாக சின்ன வெங்காயம் விலை கிடு, கிடு வென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கோவையில் மழை காரணமாக சின்ன வெங்காயம் விலை கிடு, கிடு வென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம் விளைச்சல்

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பேரூர், பொள்ளாச்சி, நரசீபுரம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சின்ன வெங்காயம் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி உள்ளிட்டவையும் விளைவிக்கப்படுகின்றன. சின்ன வெங்காயம் அறுவடை காலங்களில் அவற்றிற்கு உரிய விலை கிடைப்பது இல்லை. கடந்த மாதம் வரை கோவையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.40 வரை விலை போனது.

இந்த நிலையில் கோவையில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதன்காரணமாக கோவையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மழையால் சேதமடைந்தது. இதையடுத்து சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்து உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட் மொத்த காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகி அப்துல் சமது கூறியதாவது:-

விலை உயர்ந்தது

கோவையில் விளைவிக்கப்படும் வெங்காயம் மட்டுமின்றி கர்நாடகா, புனே உள்ளிட்ட இடங்களில் இருந்தும் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. ஒரு நாளைக்கு 400 டன் பெரிய வெங்காயம் மற்றும் 100 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்காக வருகிறது. இந்த வெங்காயங்கள் கேரளாவிற்கு விற்பனை செய்ய இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் வரை வெங்காயம் விலை குறைந்து காணப்பட்டது. அப்போது பெரிய வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.28 வரை விற்பனையானது. அதே போல் சின்ன வெங்காயம் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது.

இந்த நிலையில் கோவை மட்டுமின்றி வட மாநிலங்களிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன்காரணமாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளது. இதன்படி பெரிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.90 வரையும் விற்பனையாகிறது. மழைநீடித்தால் இவற்றின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது மொத்த விற்பனையின் விலையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்