திருவாரூர்
சின்ன வெங்காயம் விலை கிடு, கிடு உயர்வு
|விலையை கேட்டாலே கண்ணீர் வரும் வகையில் சின்னவெங்காயத்தின் விலை கிடு, கிடுவென உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி மார்க்கெட்
திருவாரூர் கடைவீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதே போல் திருவாரூரை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஓசூர், தளிக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து தினமும் தக்காளி திருவாரூருக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். தற்போது கோடை காலம் முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
தக்காளி கிலோ ரூ.140-க்கு விற்பனை
இதன் காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தக்காளி, இஞ்சி, பீன்ஸ் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. திருவாரூரில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு இருந்த காய்கறிகளின் விலையை காட்டிலும் தற்போது விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
1 கிலோ ரூ.48 முதல் ரூ.52 வரை விற்ற தக்காளி ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று மேலும் விலை அதிகரித்து மொத்தவிலைக்கு ரூ.100- க்கும், சில்லறை விலைக்கு ரூ.140-க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
சின்னவெங்காயம் விலை உயர்வு
சாம்பார் வெங்காயம் என்று அழைக்கக்கூடிய சின்ன வெங்காயம் கடந்த வாரம் கிலோரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படடது. ஆனால் தற்போது விலை கிடு, கிடு வென உயர்ந்து சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி போன்று சின்னவெங்காயமும் சமையலுக்கு அத்தியாவசியமாகும்.
இந்த சின்னவெங்காயம் இன்றி எந்த உணவு பொருளும் தயாரிக்க முடியாது. தக்காளி விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்திருந்த இல்லத்தரசிகள், சின்னவெங்காயம் விலை உயர்வால் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர். இதன் காரணமாக மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவற்றை குறைந்த அளவு வாங்கி செல்கின்றனர்.
இல்லத்தரசிகள் கவலை
மேலும் பல்வேறு காய்கறிகளின் விலை உயர்ந்து காணப்படுகிறது. கிலோ ரூ.100-க்கு விற்ற மிளகாய் ரூ.120-க்கும், கிலோ ரூ.200-க்கு விற்ற இஞ்சி ரூ.220-க்கு, கிலோ ரூ.100-க்கு விற்ற பீன்ஸ் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், கடந்த வாரம் வரை இட்லி, தோசைக்கு தக்காளி சட்டினி, தேங்காய் சட்னி என விதவிதமாய் தயார் செய்தோம். தற்போது தக்காளி விலை உயர்வினால் தக்காளி சட்னி செய்ய முடியவில்லை. சாம்பாரிலும் கூட தக்காளியை பயன்படுத்துவதை குறைக்கும் நிலை ஏற்பட்டு விட்டதுஅதனால் சாம்பார் சுவையே மாறுகிறது. பச்சை மிளகாயை குறைத்து, காய்ந்த மிளகாய் பயன்படுத்தி வருகிறோம்.
விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது
இஞ்சி இல்லாத உணவை இருக்காது ஆனால் தற்போது விலை உயர்வால் இஞ்சியை வாங்க தயக்கமாக உள்ளது. வாசத்திற்கு மட்டும் போடும் நிலைமைக்கு வந்து விட்டோம்.
சின்னவெங்காயத்தைப் பொருத்தவரை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு ரூ.45 க்கு விற்பனையானது. தொடர்ந்து விலை உயர்வினால் தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை ஆகிறது. வெங்காயத்தைப் பொறுத்தவரையில் அதனை நறுக்கும் பொழுது தான் கண்ணீர் வரும் தற்பொழுது அவற்றின் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது என்றனர்.