சென்னை
திருமணம் ஆனதை மறைத்து ஆசை வார்த்தை கூறி பெண் போலீசை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
|திருமணம் ஆனதை மறைத்து ஆசை வார்த்தை கூறி பெண் போலீசை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஒரே போலீஸ் நிலையத்தில் பணி
சென்னை வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் பவித்ரன் (வயது 30). இவருக்கு திருமணம் ஆகி விட்டது. தனது குடும்பத்துடன் ஆயிரம்விளக்கு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். வேலூரைச் சேர்ந்த 26 வயதான பெண் போலீஸ் ஒருவரும், அதே வியாசர்பாடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர், செம்பியம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஒரே போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வருவதால் பவித்ரனுக்கு, பெண் போலீசுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகினர். பல்வேறு இடங்களுக்கு இருவரும் ஜோடியாக சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.
கர்ப்பம் ஆனார்
போலீஸ்காரர் பவித்ரன், தனக்கு திருமணம் ஆகி குடும்பம் இருப்பதை பெண் போலீசிடம் கூறாமல் மறைத்துவிட்டார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை எனவும், உன்னையே திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் பெண் போலீசிடம் ஆசை வார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண் போலீஸ் 3 மாத கர்ப்பமானதாக தெரிகிறது. எனவே உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பவித்ரனை பெண் போலீஸ் வற்புறுத்தினார். அதற்கு பவித்ரன், ஏற்கனவே எனக்கு திருமணம் ஆகி குடும்பம் உள்ளது. எனவே உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துவிட்டார்.
பணியிடை நீக்கம்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், இது குறித்து செம்பியம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி கமிஷனர் செம்பேடுபாபு, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா ஆகியோர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தகவலை அறிந்த புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், பெண் போலீசை கர்ப்பமாக்கியதாக போலீஸ்காரர் பவித்ரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுபற்றி செம்பியம் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண ஆசை வார்த்தைகள் கூறி பெண் போலீசை, உடன் வேலை செய்த போலீஸ்காரரே கர்ப்பமாக்கிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.