< Back
மாநில செய்திகள்
வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக திகழும் போலீஸ் நிலையம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக திகழும் போலீஸ் நிலையம்

தினத்தந்தி
|
23 Jun 2023 6:35 PM GMT

ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் அதிக அளவில் மரங்கள் நிறைந்து காணப்படுவதால் வெளிநாட்டு பறவைகள் தங்கி ஓய்வெடுத்து வருகின்றன.

மரங்கள், செடிகள்

ராணிப்பேட்டை டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் பல்வேறு காரணங்களுக்காக போலீஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக புகார் அளிக்கவும், விசாரணைக்காகவும் போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அமர்வதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. அதே போல் மனதிற்கு அமைதி தரும் வகையில் காண்போரின் கண்களுக்கு பச்சைப்பசேலென செடிவகைகளும், செயற்கை புல்களையும் வைத்து போலீசார் பராமரித்து வருகின்றனர்.

வெளிநாட்டு பறவைகள்

புங்கை, வேங்கை, நாவல், தைலமரம் என பலவகை மரங்கள் வளர்ந்து நிழலையும், சுத்தமான காற்றையும் கொடுத்து வருகின்றது. இதுமட்டுமல்லாது இருப்பிடத்திற்காக நாள்தோறும் போலீஸ் நிலையத்தில் உள்ள மரங்களை நாடி விதவிதமாக வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு மரங்கள் அடைக்கலமும் கொடுக்கின்றன.

மரங்களில் அமரும் வெளிநாட்டு பறவைகள் கூடுகளை கட்டி ஒவ்வொரு கிளைகளிலும் 2 முதல் 4 பறவைகளாக அமர்ந்து ஓய்வெடுக்கின்றன. அவ்வாறு வரும் பறவைகளின் தாகத்தை தணிக்க காவலர்கள் மரங்களில் சிறிய பானைகளை கட்டி வைத்து அவற்றில் முறையாக தண்ணீர் நிரப்புகின்றனர். அதே போல் பறவைகள் சாப்பிட உணவு தானியங்களையும் கலந்து வைக்கின்றனர்.

களைப்பில் இளைப்பாற வரும் வெளிநாட்டு பறவைகளும் உணவு தானியங்களை சாப்பிட்ட பின் தண்ணீர் அருந்தி விட்டு மரக்கிளைகளில் கூட்டமாக தங்கி விடுகின்றன. இதனால் ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகம் வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாகவும், சரணாலயமாகவும் திகழ்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்