< Back
மாநில செய்திகள்
திருடும் வரை சார்ஜ் ஏறட்டும்... திருட வந்த இடத்தில் செல்போனை மறந்து விட்டுச் சென்ற திருடன்
மாநில செய்திகள்

திருடும் வரை சார்ஜ் ஏறட்டும்... திருட வந்த இடத்தில் செல்போனை மறந்து விட்டுச் சென்ற திருடன்

தினத்தந்தி
|
8 Oct 2022 8:37 AM IST

நாமக்கல் அருகே திருட வந்த இடத்தில் செல்போனை சார்ஜ் போட்டு விட்டு மறந்து சென்ற நிலையில், திருடனின் செல்போனைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சித்திரவேல் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு ஓட்டலை மூடி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இரவோடு இரவாக உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், இருட்டில் டார்ச் அடித்துக் கொண்டே தேடித் தேடி திருட்டு வேலையில் ஈடுபட்டுள்ளார்.

முதலில் உள்ளே இருந்த இருசக்கர வாகனத்தை திருட முயன்றுள்ளார். அதை நகர்த்த கூட முடியாததால், அந்த முடிவைக் கைவிட்டு விட்டு அப்படியே கல்லா பக்கம் ஒதுங்கியுள்ளார். அப்போது பார்த்து அவரது செல்போனில் சார்ஜ் தீர்ந்து போகவே... சரி திருடும் வரையில் சார்ஜ் ஏறட்டும் என்று கல்லா பெட்டிக்கு அருகிலேயே சார்ஜ் போட்டு விட்டு, கல்லாப் பெட்டியைத் திறந்து 20 ஆயிரம் ரூபாயை சுருட்டியுள்ளார்.

பணத்தைப் பார்த்த குஷியில் செல்போனை மறந்து விட்டு குஷியில் சுவரேறி குதித்து சென்ற அந்த அசட்டு ஆசாமியை அக்கம்பக்கத்தினர் பார்த்து விட்டனர். உடனடியாக சித்திரவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் வருவதற்குள் திருடன் தப்பியிருந்தார்.

இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதிலும், திருடனைத் தேடும் போலீசுக்கு அல்வாவைத் தூக்கிக் கொடுத்தது போல், திருடனின் செல்போனே கிடைத்த நிலையில், விரைவில் குற்றவாளி பிடிபடுவார் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



மேலும் செய்திகள்