பெண் ஓட்டுநர் கோவை ஷர்மிளா மீது போலீசார் வழக்குப்பதிவு
|பஸ் ஓட்டுநராக இருந்த ஷர்மிளா சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்தார்.
கோவை,
கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அவர் பஸ் ஓட்டுவது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி ஷர்மிளா பிரபலமானார்.
இந்தநிலையில், கோவையின் பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2-ம் தேதி கோவை சத்தி ரோடு சங்கனூர் சந்திப்பு அருகே காரில் வந்த ஷர்மிளா போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால், பணியில் இருந்த காட்டூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி விசாரித்துள்ளார்.
அதனை வீடியோ எடுத்த ஷர்மிளா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான தகவல்களுடன் பதிவிட்டதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 506(ஐ), 509, 66சி தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கோவையின் பெண் பஸ் ஓட்டுநராக வலம்வந்த ஷர்மிளா திடீரென தனியார் பஸ் நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவர் பஸ் ஓட்டுநராக இருந்தபோது திமுக எம்.பி. கனிமொழி, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், அவரை அழைத்து காரை அன்பளிப்பாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்மிளா தற்போது சொந்தமாக டாக்ஸி ஓட்டி வருகிறார்.