செங்கல்பட்டு
வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்களை செயலிழக்க செய்த போலீசார் - பொதுமக்கள் நிம்மதி
|சிங்கப்பெருமாள் கோவில் அருகே வனப்பகுதியில் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்களை பாதுகாப்பான முறையில் போலீசார் செயலிழக்க செய்ததால் பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரம் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இதன் அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி வெடிகுண்டு போல் ஒரு மர்ம பொருள் கிடைப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாக கூடுவாஞ்சேரி உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் ஏராளமான போலீசார் அனுமந்தபுரம் வனப்பகுதிக்கு சென்று பார்த்த போது அங்கு வெடிக்காத ஒரு ராக்கெட் லாஞ்சர் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் தொடர்ந்து வனப்பகுதியில் தேடும்போது மேலும் 2 வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் கிடைத்தது. கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்களை அதே வனப்பகுதியில் சுமார் 2½ அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி பாதுகாப்பாக பள்ளத்தில் வைத்து அதனை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி போலீசார் பாதுகாப்புக்காக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு கமாண்டோ படைபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கேஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் ராக்கெட் லாஞ்சர்களை செயலிழக்கும் பணியில் இறங்கினர். இதையடுத்து பொக்லைன் ஏந்திரங்கள் மூலம் புதைத்து வைத்திருந்த இடத்தில் இருந்து 3 ராக்கெட் லாஞ்சர்களை தோண்டி எடுத்து வேறு இடத்தில் பள்ளம் தோண்டி அதில் புதைத்து வைத்து பின்னர் அதனை வெடிக்க வைத்து செயலிழக்க செய்தனர். இதனால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ் மற்றும் ஏராளமான போலீசார் தயார் நிலையில் இருந்தனர். கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்களையும் பாதுகாப்பாக போலீசார் வெடிக்க வைத்து செயல் இழக்க செய்ததால் அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.