< Back
மாநில செய்திகள்
மதுபானம் விற்ற பெண்ணை திருத்தி தள்ளுவண்டி வைத்துக் கொடுத்த போலீசார்
மாநில செய்திகள்

மதுபானம் விற்ற பெண்ணை திருத்தி தள்ளுவண்டி வைத்துக் கொடுத்த போலீசார்

தினத்தந்தி
|
3 Sept 2023 7:40 PM IST

சாராயம் விற்ற பெண்ணை ஐஸ் ஹவுஸ் போலீசார் திருத்தி தள்ளுவண்டி வைத்துக் கொடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியில் பாலம்மாள் என்கிற 42 வயது பெண் கடந்த 10 ஆண்டுகளாக திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது போலீசார் பலமுறை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் பாலம்மாள் வேறு வேலைக்கு ஏதும் செல்லாமல் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதை வழக்கமாகவே வைத்திருந்தார்.

இதையடுத்து அவரை திருத்தி நல்வழிப்படுத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ராயப்பேட்டை உதவி கமிஷனர் பாலமுருகன், ஐஸ்அவுஸ் இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணராஜ் ஆகியோர் பாலம்மாளை அழைத்துப் பேசினர். அப்போது அவர் மதுபாட்டில் விற்பனை தவிர வேறு தொழில் எதுவும் எனக்கு தெரியாது என்றார். இருப்பினும் போலீசார் அவருக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி மனதை மாற்றினர்.

இதன் பின்னர் டிபன் கடை வைத்து தந்தால் அதை வைத்து பிழைத்துக் கொள்கிறேன் என பாலம்மாள் கூறினார். இதையடுத்து தள்ளுவண்டி மற்றும் டிபன் கடைக்கு தேவையான பாத்திரங்கள், தட்டுகள், கரண்டிகள் உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி கொடுத்தனர். முதலில் பிரிஞ்சி வியாபாரம் செய்ய விரும்புவதாக பாலம்மாள் தெரிவித்ததை தொடர்ந்து 4 நாட்களுக்கு உணவையும் வாங்கி தருவதாக தெரிவித்து வாங்கி கொடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து பாலம்மாள் இன்று முதல் தனது வியாபாரத்தை தொடங்கினார். ஐஸ்அவுஸ் போலீசாரின் இந்த கருணை உள்ளத்தை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். மது பாட்டில்களை பிடித்த கைகளில் கரண்டியை தூக்கி பிடித்தபடியே பாலம்மாள் தனது புதிய வாழ்க்கை பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

மேலும் செய்திகள்