ரவுடிகளை ஒடுக்க மீண்டும் விஸ்வரூபம் எடுத்த போலீசார்
|ரவுடிகளை ஒடுக்குவதற்கு ‘என்கவுண்ட்டர்’ யுக்தியை போலீசார் கையாள தொடங்கியுள்ளனர்.
சென்னை,
1975-ம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டில் நக்சலைட்டுகள் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக 'என்கவுண்ட்டர்' எனப்படும் துப்பாக்கியால் சுடும் கலாசாரத்தை போலீசார் கையில் எடுத்தனர். இதனால் தமிழ்நாட்டில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் ஒழிந்தது. அதன் பின்னர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரவுடிகளை ஒடுக்குவதற்கு 'என்கவுண்ட்டர்' யுக்தியை போலீசார் தொடர்ந்து கையாள தொடங்கினர்.
சென்னையில் 'என்கவுண்ட்டர்' மூலம் ரவுடிகளை சுட்டு வீழ்த்தும் கலாசாரம் 1998-ம் ஆண்டுக்கு பிறகுதான் அதிகளவில் அரங்கேற தொடங்கின. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், போலீசாருக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கிய அயோத்திக்குப்பம் வீரமணி, பங்க் குமார், வெள்ளை ரவி போன்ற பிரபல ரவுடிகளை என்கவுண்ட்டர் மூலம் போலீசார் சுட்டுக்கொன்றனர்.
கடந்த ஆண்டு சென்னை புறநகர் பகுதியை அச்சுறுத்தி வந்த சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய 2 ரவுடிகள் ஊரப்பாக்கம் பகுதியில் போலீசாரின் என்கவுண்ட்டருக்கு இரையானார்கள். காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே குள்ள விஷ்வா என்ற பிரபல ரவுடியும் இதே போல் சுட்டு வீழ்த்தப்பட்டார். செங்குன்றம் அருகே முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 ரவுடிகளும் போலீசாரின் என்கவுண்ட்டருக்கு பலியாகினர்.
இந்தநிலையில் ரவுடிகளை ஒடுக்க மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள போலீசார், கடந்த 11-ந் தேதி, புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரையை 'என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தினர். இப்போது ரவுடி திருவேங்கடமும் சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடிகளின் அட்டூழியத்தை ஒழிக்க சென்னை புதிய போலீஸ் கமிஷனர் அருணின் தலைமையில் போலீசார் புதிய அவதாரம் எடுத்துள்ளது ரவுடிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகிறார்கள்.