திருவாரூர்
சுட்டெரிக்கும் வெயிலால் செடி, கொடிகள் கருகின
|கூத்தாநல்லூர் பகுதியில் சுட்ெடரிக்கும் வெயிலால் செடி, கொடிகள் கருகியதால் மேய்ச்சல் இன்றி கால்நடைகள் தவித்து வருகின்றன
கூத்தாநல்லூர்,
கூத்தாநல்லூர் பகுதியில் சுட்ெடரிக்கும் வெயிலால் செடி, கொடிகள் கருகியதால் மேய்ச்சல் இன்றி கால்நடைகள் தவித்து வருகின்றன.
சுட்டெரிக்கும் வெயில்
மேட்டூர் அணையில் இருந்து கடந்த மே மாதம் 24-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி நீர் ஆறுகளில் அதிகளவில் சென்றாலும், பெரும்பாலான வயல்களுக்கு இன்னமும் தண்ணீர் செல்லவில்லை. பருத்தி சாகுபடி பாதிக்கும் என்பதால் வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் பல விவசாயிகள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். பகலில் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.
செடி, கொடிகள் கருகின
ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் செல்கின்ற போதிலும், கூத்தாநல்லூர் பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதாலும், மழை பொழிவு இல்லாமல் உள்ளதாலும் பெரும்பாலான விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொள்ள இன்னமும் தயாராகவில்லை என்றும் கூறப்படுகிறது.
கடுமையான வெயில் காரணமாக கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் பல வயல்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. செடி, கொடிகள் எல்லாம் கருகி காட்சி அளிக்கின்றன.
கால்நடைகள் தவிப்பு
எல்லா காலத்திலும் செழிப்பாக இருக்கும் கருவேல மரங்கள் கூட கருகி உள்ளன. இதனால் ஆடு. மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் கடந்த ஒரு மாத காலமாக மேய்ச்சல் இன்றி தவித்து வருகின்றன. இத்தகைய நிலையில் மழை பொழிவையே அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.