திருவள்ளூர்
ஓட்டலில் தங்கியிருந்தவர் மர்மச்சாவு
|ஓட்டலில் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (வயது45). இவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்து விடுப்பிற்காக இந்தியா வந்துள்ளார். இவருக்கும் செங்கல்பட்டு நத்தம் மேட்டு தெருவை சேர்ந்த சுபாஷினி என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே சுபாஷினி பெங்களூருவில் பணிபுரிந்த நிலையில் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு காயமடைந்துள்ளனர்.
இதனால் சுபாஷினி தனது குழந்தை மற்றும் கணவருடன் செங்கல்பட்டில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த 20 நாட்களாக ஓய்வெடுத்து வந்தார். இதற்கிடையே ஜெய்கணேஷ் தினமும் மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்படவே ஜெய்கணேஷ் செங்கல்பட்டு வேதாச்சலம் நகர் எதிரேயுள்ள ஓட்டலில் அறை எடுத்து கடந்த 8 நாட்களாக தங்கி இருந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் அறையை சுத்தம் செய்வதற்காக வந்தபோது ஜெய் கணேஷ் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் மாற்று சாவியின் மூலம் விடுதி அறையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெய்கணேஷ் மர்மமான முறையில் இருந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெய்கணேஷ் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.