சென்னை
வீட்டுக்குள் தஞ்சமடைந்தவர் வெட்டிக்கொலை: கொலை செய்யப்பட்டவர் பிரபல ரவுடி
|போரூர் அருகே வீட்டுக்குள் தஞ்சமடைந்தபோதும் வெட்டிக்சொலை செய்யப்பட்டது, பிரபல ரவுடி என அடையாளம் தெரிந்தது. தங்களை தீர்த்துக்கட்ட முயன்றதால் எதிர்கோஷ்டியினர் முந்திக்கொண்டு கொலை செய்தது தெரிந்தது.
சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல், சுப்பிரமணியம் நகர், பொன்னியம்மன் கோவில் தெருவில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து வெட்டியது. இதனால் அந்த வாலிபர் உயிருக்கு பயந்து அருகில் இருந்த வீட்டுக்குள் தஞ்சமடைந்தார். அந்த கும்பல் விடாமல் விரட்டிச்சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்டவர் யார்?, கொலையாளிகள் யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், மாங்காடு அடுத்த பெரியபணிச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி வினோத் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரது உடலை பார்த்த அவருடைய தாயாரும், அது தனது மகன் வினோத் தான் என அடையாளம் காட்டியதால் கொலை செய்யப்பட்டது வினோத் என்பது உறுதியானது. அய்யப்பன்தாங்கலில் வசிக்கும் தனது தாயாரை பார்ப்பதற்காக வந்தபோதுதான் வினோத்ைத மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்ததும் தெரிந்தது. வினோத் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாங்காட்டில் திருட்டு செல்போன்களை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வினோத்தின் தம்பியை இவரது எதிர்கோஷ்டியான அஜித் தரப்பினர் வெட்டிக்கொலை செய்தனர். தனது தம்பி கொலைக்கு பழி வாங்குவதற்காக கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டுகளை மோட்டார் சைக்கிள் வைத்து எடுத்து சென்றபோது பரணிபுத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்து சிதறியதில் வினோத் காயம் அடைந்தார்.
அதன் பிறகு மாங்காடு போலீசார் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்தவர், கோவைக்கு சென்று தலைமறைவானார். எனினும் தம்பியின் கொலைக்கு பழிவாங்குவதற்காக அஜித் தரப்பினரை கொலை செய்ய தீவிரம் காட்டி வந்தார்.
அதனை அறிந்து கொண்ட அஜித் தரப்பினர், தங்களை கொலை செய்வதற்கு முன்பாக முந்திக்கொண்டு வினோத்தை கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்களுக்குள் அந்த ஏரியாவில் யார் பெரிய தாதா? என்பது தொடர்பாகவும் கடும் போட்டி நிலவியது.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வினோத்தை கொலை செய்த அஜித் தரப்பினரை போலீசார் தேடி வருகின்றனர். வினோத் சிறையில் இருந்து வெளியே வந்தது போலீசாருக்கு தெரியாமல் இருந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்ட பிறகுதான் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.