சென்னை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மருத்துவ பரிசோதனைக்கு வந்த போக்சோ கைதி தப்பி ஓட்டம்
|சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் டி.என்.ஏ. பரிசோதனைக்கு வந்த போக்சோ கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் ராஜா (வயது 42). இவர் சென்னை கோயம்பேடு பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், தனது அலுவலகத்தில் பணியாற்றிய 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மே மாதம் சிறுமியின் உறவினர்கள் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் செந்தில் ராஜா மீது புகார் அளித்தனர். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
கடந்த 4 மாதங்களாக செந்தில் ராஜா சிறையில் இருந்தார். இந்த நிலையில், அவருக்கு டி.என்.ஏ. பரிசோதனை எடுப்பதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். உடன் வந்த போலீசார் ஆஸ்பத்திரி வளாகத்தில் அவரை ஒரு இருக்கையில் அமர வைத்துள்ளனர். அப்போது, அவர் சிறுநீர் கழிக்க வேண்டுமென போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அவரை சிறுநீர் கழிக்க அருகில் இருந்த கழிவறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கழிவறைக்கு சென்ற செந்தில் ராஜா நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, டி.என்.ஏ. பரிசோதனை முடியும் முன்பாகவே செந்தில் ராஜா கழிவறை கட்டிடத்தின் பின்பக்கம் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியது தெரியவந்தது. பின்பக்கம், மரங்கள் மற்றும் புதர்கள் மண்டி கிடந்த நிலையில் உள்ளே சென்றும் அவரை தேடினர். ஆனால், அவரை காணவில்லை.
தொடர்ந்து, தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசாரும் அவரைத் தேடும் பணியில் இறங்கியுள்ளனர். இதேபோல, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியை ஒட்டிய சாலைகளில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும் கைதியை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், போக்சோ வழக்கு குற்றவாளி பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் கவனக்குறைவினால் தப்பித்து சென்றாரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டி.என்.ஏ. பரிசோதனைக்கு வந்த கைதி தப்பி சென்ற சம்பவம் கீழ்ப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.