< Back
மாநில செய்திகள்
திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு திரும்பியவர் வாகனம் மோதி பலி
திருச்சி
மாநில செய்திகள்

திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு திரும்பியவர் வாகனம் மோதி பலி

தினத்தந்தி
|
18 Oct 2023 1:52 AM IST

திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு திரும்பியவர் வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.

மணப்பாறை:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறையை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 55). இவர் தனது மனைவியின் தங்கை மகனுக்கு திருமணம் என்பதால், அந்த திருமண அழைப்பிதழை நேற்று திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த குளத்தூராம்பட்டியில் உள்ள உறவினர்களுக்கு கொடுத்து விட்டு, மோட்டார் சைக்கிளில் மணப்பாறை வழியாக செந்துறை நோக்கி சென்றார். தரகம்பட்டி-மணப்பாறை சாலையில் விடத்திலாம்பட்டி ஓம்சக்தி கோவில் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதையறிந்து அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் திரண்டனர். விபத்து நடந்த இடத்தின் அருகே பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் பல மாதங்களாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் இதுவரையும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மோசமான சாலையால் தான் விபத்து ஏற்படுகிறது கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், மணப்பாறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர் அங்கு வந்து, சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து இறந்தவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் ஹெல்மெட் அணிந்திருந்தபோதும் இருதயராஜ் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்