< Back
மாநில செய்திகள்
ரூ.6 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து புதிய கார் வாங்கிய நபர்
மாநில செய்திகள்

ரூ.6 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து புதிய கார் வாங்கிய நபர்

தினத்தந்தி
|
18 Jun 2022 2:49 PM GMT

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரூ.6 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து புதிய காரை வாலிபர் ஒருவர் வாங்கி உள்ளார்.

சேலம்,

தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 27). நாட்டு வைத்தியரான இவர், அங்கு மழலையர் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரின் பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகள் 10 ரூபாய் நாணயங்களை வைத்து விளையாடி கொண்டிருந்தனர். இதுபற்றி அவர் குழந்தைகளிடம் கேட்டபோது, இந்த காசு செல்லாது என்பதால் பெற்றோர் விளையாட தந்ததாக கூறியுள்ளனர்.

ஆனால் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும், அது புழக்கத்தில் உள்ளது என்பது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வெற்றிவேல் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்து கார் வாங்க முடிவு செய்தார். அதன்படி அப்பகுதி மக்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து ரூ.6 லட்சம் அளவுக்கு 10 ரூபாய் நாணயங்களை சேமித்து வைத்திருந்தார்.

இந்தநிலையில், வெற்றிவேல் இன்று தனது குடும்பத்தினருடன் 10 ரூபாய் நாணயங்களை ரூ.5 ஆயிரமாக பிரித்து அதை பார்சல்களாக கட்டி மூட்டைகளாக சேலம் ஜங்ஷன் மெயின்ரோட்டில் உள்ள ஒரு கார் ஷோரூமிற்கு எடுத்து வந்தார். பின்னர் அவர் ரூ.6 லட்சத்துக்கு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்து புதிய கார் வாங்கினார். அந்த நாணயங்களை கார் ஷோரூம் ஊழியர்கள் எண்ணி சரிபார்த்து காரை அவரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வெற்றிவெல் கூறுகையில்,

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. ஆனால் சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை கடைகளிலும், ஓட்டல்களிலும் வாங்க மறுக்கிறார்கள். இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10 ரூபாய் நாணயங்களை ரூ.6 லட்சத்துக்கு சேகரித்து கார் வாங்கியுள்ளேன், என்றார்.

மேலும் செய்திகள்