சென்னை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவர் - போக்சோ சட்டத்தில் கைது
|சென்னை கொடுங்கையூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்த மருத்துவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை அவளது பெற்றோர், சிகிச்சைக்காக ராயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமியை யாரோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி இருப்பதாக கூறினர். அதை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி சிறுமியிடம் அவரது தாய் விசாரித்தார்.
அப்போது கொடுங்கையூர் எம்.ஜி.ஆர். நகரில் சித்தா கிளினிக் நடத்தி வரும் பாலசுப்பிரமணியம் (வயது 65) என்ற சித்த மருத்துவர்தான், சிறுமியை தனது சித்தா கிளினிக்கிற்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக கூறினார்.
இதுபற்றி சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் எம்.கே.பி. நகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சித்த மருத்துவர் பாலசுப்பிரமணியத்தை நேற்று அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.