செங்கல்பட்டு
போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
|போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு சென்ற பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் அழகேசன் நகர், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 49). பெயிண்டர். கொளப்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக இவருக்கும், கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் ஒட்டேரி போலீசார் சங்கரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் வரும்படி அழைத்தனர்.
இதற்காக சங்கர் குடிபோதையில் ஓட்டேரி போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவர், "என் மீது கோவில் நிர்வாகிகள் பொய்யான புகார் தெரிவித்து உள்ளனர். இதனால் நான் விஷம் குடித்து விட்டேன்" என்று போலீசாரிடம் கூறிவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக ஒட்டேரி போலீசார் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்கர் போலீஸ் நிலைய வாசலில் வந்து விஷம் குடித்து இறந்தாரா? என்று போலீசாரிடம் கேட்டதற்கு, "அவர் போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடிக்கவில்லை, வேறு எங்கேயோ குடித்து விட்டு போலீஸ் நிலையம் வந்து நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறியதால் அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தோம்" என்றனர்.