< Back
மாநில செய்திகள்
தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

தினத்தந்தி
|
29 Sept 2023 12:15 AM IST

சாத்தனூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திருக்கோவிலூர் தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர்:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை மற்றும் திருவண்ணாமலை சாத்தனூர் அணை ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். இதில் 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

சாத்தனூர் அணையில் 117 அடி வரை நீர் நிரம்பியுள்ளதால் கடந்த 25-ந் தேதி முதல் வினாடிக்கு 1,570 கன அடி உபரிநீராக தென்பெண்ணைஆற்றில் வெளியேற்றி வருகின்றனர்.

இதன் காரணமாக தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும், ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 6 மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்பெண்ணையாற்றில் குளிக்க தடை

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், மணலூர்பேட்டை பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாற்றை கடந்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எல்லீஸ்சத்திரம், தளவானூர் ஆகிய தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆற்றின் இருபுறங்களிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல் ஆற்றுப்பகுதிகளில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் செல்வதை தடுக்கவும், குளிப்பதை தடுக்கும் வகையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

போக்குவரத்து நிறுத்தம்

திருக்கோவிலூர் கீழையூரையும், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரையும் இணைக்கும் வகையில் போடப்பட்டுள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து நேற்று 2-வது நாளாக நிறுத்தப்பட்டு இருந்தது. தரைப்பாலத்தின் இருபுறமும் பேரிகார்டு போட்டு, தடுப்பு ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேமிக்க முடியவில்லை

மேலும் தளவானூர் அணைக்கட்டு கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி உடைந்து சேதமடைந்ததோடு 3 ஷட்டர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. அணைக்கட்டு உடைந்து 3½ ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுநாள் வரையிலும் புதிய அணைக்கட்டை கட்டுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கடந்த ஆண்டுகளைப்போல் இந்த ஆண்டும், தளவானூர் தென்பெண்ணையாற்றுக்கு வரும் தண்ணீர் அப்படியே வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. ஏற்கனவே எல்லீஸ்சத்திரத்தில் உள்ள அணைக்கட்டு உடைந்த நிலையில் அங்கு புதிய அணைக்கட்டு கட்டப்படவில்லை. அதுபோல் தளவானூரிலும் புதிய அணைக்கட்டு கட்டப்படாததால் தென்பெண்ணையாற்றில் ஓடும் தண்ணீர் முழுவதையும் சேமித்து வைக்க முடியாமல் அப்படியே வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. இதனை பார்க்கையில் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் வேதனையடைந்து வருகின்றனர்.

வீணாக கடலில் கலக்கிறது

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தளவானூர் அணைக்கட்டு உடைந்து 3½ ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதுபோல் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு உடைந்து 2½ ஆண்டுகள் ஆகிறது. இங்கு புதிய அணைக்கட்டுகள் கட்டக்கோரி பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தியபோதிலும் இதுநாள் வரையிலும் தளவானூர், எல்லீஸ்சத்திரம் தென்பெண்ணையாற்றில் புதிய அணைக்கட்டு கட்டப்படவில்லை. இதனால் பருவமழை காலங்களில் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரை சேமித்து வைக்க முடியாமல் அப்படியே வீணாக கடலில் சென்று கலக்கிறது. இந்த ஆண்டும் அதே நிலைமைதான் நீடிக்கிறது. இதனால் வரும் கோடை காலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும். அதுபோல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படலாம்.

விரைந்து கட்டப்படுமா?

எல்லீஸ்சத்திரத்தில் புதிய அணைக்கட்டு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசு, சமீபத்தில் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் தளவானூரில் அணைக்கட்டு கட்டுவது பற்றி இதுவரையிலும் அரசாணை வெளியிடப்படவில்லை. ஆகவே அடுத்த ஆண்டுக்குள் தளவானூர், எல்லீஸ்சத்திரத்தில் புதிய அணைக்கட்டுகளை அரசு விரைந்து கட்டி முடித்து தண்ணீரை சேமித்து வைக்க உரிய நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்