கரூர்
ஒடுக்கப்பட்டவர்கள் மீட்கப்பட வேண்டும்; ஒடுக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்-பயிற்சி முகாமில் கலெக்டர் வலியுறுத்தல்
|ஒடுக்கப்பட்டவர்கள் மீட்கப்பட வேண்டும். ஒடுக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கொத்தடிமைகள் மீட்பு தொடர்பான பயிற்சி முகாமில் கலெக்டர் வலியுறுத்தினார்.
பயிற்சி முகாம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மெஷின் என்ற அமைப்பு சார்பாக கொத்தடிமை ஒழிப்பு தொடர்பான பயிற்சியினை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேற்று தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொத்தடிமை முறை நடைபெறுவதை பார்த்து பொதுமக்கள் வருத்தப்படுவதும், அது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவதும் போல் அலுவலர்கள் இருக்கக்கூடாது. ஒடுக்கப்பட்டவர்கள் மீட்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்கள் உரிய மறுவாழ்வு பெற வேண்டும்.ஒடுக்கியவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அதற்காக நமது அரசியல் அமைப்பு சட்டம் அரசு அலுவலர்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கி உள்ளது. அதற்கான பயிற்சி தான் உங்களுக்கு அளிக்கப்படுகிறது.
உறுதிமொழி
இந்த பயிற்சியில் துறை சார்ந்த அலுவலர்கள், சட்டத்துறை மற்றும் போலீசார் பயிற்சி அளிக்க உள்ளனர். சட்ட நுணுக்கங்களையும், சட்டத்தை பற்றியும் தெரிந்துஇருக்க வேண்டும்.கொத்தடிமை முறைகளை ஒழிப்பதற்காக அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். கொத்தடிமை ஒழிப்பு தினம் நெருங்கி வரும் இந்த வேளையில் அதை ஒட்டி இந்த பயிற்சி உங்களுக்கு அளிப்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகும். அதனால் இந்த பயிற்சியை அனைவரும் எடுத்துக்கொண்டு அதன் மூலம் களத்தில் இறங்கி மனிதனை மனிதன் சுரண்டாத கொத்தடிமை தனம் இல்லாத கரூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் சேர்ந்து உறுதியேற்று இந்த பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கலெக்டர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் கொத்தடிமை ஒழிப்பு தின உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமராஜ், தனித்துணை கலெக்டர் சைபுதீன், ஆர்.டி.ஓ. ரூபினா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.