< Back
மாநில செய்திகள்
நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

'நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
12 May 2024 5:57 AM IST

'நீட் தேர்வில் ஏற்படும் கெடுபிடிகள், வினாத்தாள்களில் உண்டாகும் குளறுபடிகள் அனைத்திற்கும் ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் தான்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

சென்னையில் உள்ள ரஷியா அறிவியல் மற்றும் கலாசார மையத்தில், 'ரஷியா கல்வி கண்காட்சி- 2024' நிகழ்ச்சியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். ரஷியா நாட்டு பல்கலைக்கழகங்கள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, 'ரஷியாவில் 63 மருத்துவ பல்கலைக்கழகங்கள் உள்ளன. கடந்த 50-60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்தியாவிலிருந்து அங்கு சென்று மருத்துவக் கல்வி பயின்று வருகிறார்கள், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ரஷியாவுக்கு சென்று மருத்துவம் பயின்று வருகிறார்கள், ரஷியாவில் உள்ள மிகப்பெரிய, ரஷியா மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகிகள் கண்காட்சியின் மூலம் பொதுமக்களுக்கு தகவல்களை அளிக்கின்றனர்.

தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்து கேட்ட கேள்விக்கு, தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ, கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன். இருந்தாலும் இதற்கெல்லாம் ஒரே தீர்வு முழுமையாக நீட் தேர்வில் இருந்து விலக்கு.

நீட் தேர்வில் தொடக்கத்தில் இருந்தே கெடுபிடிகளும், குழப்பங்களும், குளறுபடிகளும் தொடர்ச்சியாக இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் ஏற்படும் போதுதான் நடக்கும். கேரளா-தமிழ்நாடுக்கான 13 இணைப்பு சாலைகளின் எல்லையிலும் புதிய நோய் பாதிப்புகள் கவனிக்கப்பட்டு வருகிறது' என்றார்.

நிகழ்ச்சியில், தென்இந்தியாவுக்கான ரஷியா துணைத்தூதர் அவ்தீவ் ஓலெக் நிகோலயேவிச், சென்னை துணைத்தூதர் அலெக்சாண்டர் டோடோநவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்