< Back
மாநில செய்திகள்
வெங்காய குடோன்-வீடு தீப்பற்றி எரிந்தது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வெங்காய குடோன்-வீடு தீப்பற்றி எரிந்தது

தினத்தந்தி
|
12 July 2022 12:06 AM IST

வெங்காய குடோன்-வீடு தீப்பற்றி எரிந்தது.

சின்ன வெங்காய குடோன்

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் ஏற்கனவே வெவ்வேறு சமூகங்களை சோ்ந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட வழக்கில் 42 பேரை பெரம்பலூர் போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லாடபுரம் மேற்கு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் ஒரு சமூகத்தை சேர்ந்த விவசாயியான கனகராஜ் (வயது 42) என்பவருக்கு சொந்தமான சின்ன வெங்காய குடோன் லாடபுரம்-அம்மாபாளையம் செல்லும் சாலையோரத்தில் இருந்தது. ஆஸ்பெட்டாஸ் ஷீட், கீற்றினாலான கொட்டகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த குடோன் நேற்று முன்தினம் இரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.

இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குடோன் கொட்டகையில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த கொட்டகை முற்றிலும் எரிந்து நாசமானது. அந்த குடோனில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஏதும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

குடிசை வீடு

இந்நிலையில் நேற்று அதிகாலை லாடபுரம் பழைய மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மற்றொரு சமூகத்தை சேர்ந்த அள்ளியம்மை என்பவரது குடிசை வீடும் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சேதமடைந்திருந்த அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சின்ன வெங்காய குடோன் கொட்டகைக்கும், குடிசை வீட்டிற்கும் மர்மநபர்கள் தீ வைத்து சென்றார்களா? அல்லது வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் தீ வைத்தார்களா? அல்லது பாதிக்கப்பட்டர்களின் சமூகத்தை சேர்ந்தவர்களே தீ வைத்து விட்டு நாடகம் நடத்துகிறார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் போலீசாரும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ வைப்பு சம்பவங்களால் அச்சம்

ஏற்கனவே கடந்த மாதம் 25-ந்தேதி ரவி என்பவரது கீற்றினாலான சின்ன வெங்காய குடோன் கொட்டகையும், கடந்த 4-ந்தேதி நீதி என்பவரது மாட்டு கொட்டகையும் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்று தெரியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், தற்போது அடுத்தடுத்து நடந்த 2 தீ வைப்பு சம்பவங்கள் போலீசாருக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. அடுத்தடுத்து அரங்கேறி வரும் தீ வைப்பு சம்பவங்கள் லாடபுரம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்