திருவள்ளூர்
ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி வீட்டில் புகுந்து நகை-வெள்ளி பொருட்கள் கொள்ளை
|ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி வீட்டில் புகுந்து நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கலவை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 64). இவர் தனது மகளை பார்ப்பதற்காக சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று தங்கினார். பின்னர், நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 10 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது தொடர்பாக ராஜேஸ்வரி பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொள்ளை நடந்த வீட்டில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.