< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
|17 Nov 2022 1:10 PM IST
சென்னை பெரம்பூரில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் எஸ்.எஸ்.வி. கோவில் தெருவை சேர்ந்தவர் சரோஜா (வயது 75). இவர், நேற்று அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு ஆட்டோ ஓட்டிவந்த ஒருவர், "பாட்டி உங்கள் மகனுக்கு விபத்து ஏற்பட்டு உள்ளது. உங்களை கூப்பிடத்தான் வந்தேன். ஆட்டோவில் ஏறுங்கள்" என்றார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டியும், ஆட்டோவில் ஏறினார்.
அங்கிருந்து 3 தெரு தள்ளி சென்றதும் அந்த ஆசாமி திடீரென மூதாட்டி சரோஜா அணிந்திருந்த 10 கிராம் கம்மலை பறித்துக்கொண்டு ஆட்டோவில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றார். இதில் மூதாட்டிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்த புகாரின்பேரில் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்து சென்ற ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.