நீலகிரி
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
|பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஊட்டி
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்க கூட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நீலகிரி மாவட்ட 16-வது கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சலீம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாவட்ட பொருளாளர் அய்யனார் ஆகியோர் அறிக்கை வாசித்தனர்.
கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி பணிகளில் ஒப்பந்த பணியாளர்கள் நியமனத்தை கைவிட வேண்டும். அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டர் விடுப்பு, அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்.
காலி பணியிடங்கள்
அரசு துறைகளில் காலியாக 4½ லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பச்சை தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் அனைத்து துறை ஊழியர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, அவசர முதலுதவி சிகிச்சைக்கு உரிய கட்டமைப்புடன் மருத்துவ மையம் ஏற்படுத்த வேண்டும். அங்கு மற்றும் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்திற்கு பொதுமக்கள், ஊழியர்கள் சென்று வர வசதியாக ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பஸ் இயக்க வேண்டும்.
நீலகிரியில் புதிதாக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் கொண்டு வர வேண்டும். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த வசதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர் பிரபாவதி வரவேற்றார். மாநில துணை தலைவர் பரமேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், ஊட்டி கிளை தலைவர் கோபால், மாவட்ட துணை தலைவர்கள், கந்தசாமி, குமார், பொதுச்செயலாளர் முத்துகுமார், இணை செயலாளர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.