தேனி
ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த முதியவர்
|போடி அருகே ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த முதியவரை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
போடி அருகே சிலமலை கிராமத்தில் உள்ள பெருமாள்கோவில் அருகே கிணறு ஒன்று உள்ளது. நேற்று அந்த பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பூபதி (வயது 53) என்பவர் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஆடு ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. இதை பார்த்து பூபதி அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த ஆட்டை மீட்க அவர் கிணற்றில் குதித்தார். அந்த கிணறு சுமார் 30 அடி ஆழம் கொண்டது. அதில் 10 அடிக்கு தண்ணீர் இருந்தது. கிணற்றில் இருந்து முதியவரால் மேலே வர முடியாமல் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார்.
அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பூபதியையும், ஆட்டையும் மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.