< Back
மாநில செய்திகள்
இறங்கும்போது பேருந்து நிற்காததால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி - காலில் ஏறி இறங்கிய பேருந்து
மாநில செய்திகள்

இறங்கும்போது பேருந்து நிற்காததால் நிலைதடுமாறி கீழே விழுந்த மூதாட்டி - காலில் ஏறி இறங்கிய பேருந்து

தினத்தந்தி
|
5 May 2024 5:31 PM IST

பேருந்து மாறி ஏறிய மூதாட்டியை நடத்துனர் இறக்கிவிட்டபோது, நிலைதடுமாறிய மூதாட்டி கீழே விழுந்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனது சொந்த வேலைக்காக பவானி வந்துள்ளார். பின்னர் மீண்டும் சித்தோடு செல்வதற்காக கட்டணம் இல்லாத மகளிர் இலவச பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் அந்த பேருந்து சித்தோடு வழியாக செல்லவில்லை.

இந்த நிலையில் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறுவதற்காக அவசரமாக ஓட்டுனர் பேருந்தை இயக்கியபோது, நடத்துனர் இந்த பேருந்து சித்தோடு வழியாக செல்லாது என்று கூறி அவசர அவசரமாக மூதாட்டியை பேருந்திலிருந்து இறக்கி விட்டுள்ளார். அப்போது பேருந்து நிற்காததால் நிலை தடுமாறிய மூதாட்டி கீழே விழுந்தார்.

இதில் பேருந்தின் பின் சக்கரம் மூதாட்டியின் கால்கள் மீது ஏறி இறங்கியது. இதில் அவரது கால்கள் நசுங்கியது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டி பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த விபத்து தொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுனரும் நடத்துனரும் முறையாக செயல்படாததே இந்த விபத்துக்கான காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்