பெரம்பலூர்
ஆக்கிரமிப்புக்குள்ளான நீர்நிலைகளை பார்க்க வரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்து அழைப்பு விடுத்த மூதாட்டி
|ஆக்கிரமிப்புக்குள்ளான நீர்நிலைகளை பார்க்க வரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்து மூதாட்டி அழைப்பு விடுத்தார்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கடந்த 2 வாரமாக நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க முடியாமல் போன குன்னம் தாலுகா, நன்னை கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் (வயது 70) என்பவர், இந்த வாரம் வந்து கலெக்டர் கற்பகத்தை சந்தித்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஏரி, குளங்களிலும், அதன் வாய்க்கால்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 2001-ம் ஆண்டு முதல் தனி ஆளாக போராடி வருகிறேன். வாய்க்கால்களை சிலர் விவசாய நிலங்களாக ஆக்கிரமித்துள்ளனர். ஏரிகளில் சிலர் வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தீர்ப்பு பெற்றுள்ளேன். அதற்கும் நியாயம் கிடைக்கவில்லை. டிராபிக் ராமசாமி மூலம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதில் 2 வீடுகள் இடிக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டேன். நியாயம் கிடைக்கவில்லை. போராடி வரும் என்னை சிலர் தாக்கியும் உள்ளனர்.
நீர்நிலைகளை பார்வையிட அழைப்பு
நீர்நிலைகளை அளக்க நில அளவையாளர்களும் வரவில்லை. தாசில்தார் அலுவலகத்தில் இருந்து எனக்கு மிரட்டல் வருகிறது. முன்னதாக மாவட்டத்தில் பணிபுரிந்த 4 கலெக்டர்களை சந்தித்து இது தொடர்பாக மனு கொடுத்துள்ளேன். எனவே தற்போதைய கலெக்டர் எங்கள் கிராமத்திற்கு வந்து நீர்நிலைகளை பார்வையிடுங்கள். தவறாக கூறியிருந்தால் எனக்கு தண்டனை கொடுங்கள். இந்த பிரச்சினைக்கு கலெக்டர் நல்ல தீர்ப்பு அளிக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
மேலும் கலெக்டரிடம் நல்லம்மாள் நீர்நிலைகளின் ஆவணங்கள், வரைபடங்கள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்ட மனுக்கள், கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகள், அவற்றின் தீர்ப்புகள் ஆகியவற்றை காண்பித்தார். அப்போது கலெக்டர் கற்பகம் நல்லம்மாளிடம் கிராமத்திற்கு நீர்நிலைகளை பார்க்க வருவதாக தெரிவித்தார்.
விபத்துகளை தடுக்க...
தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் மணிமாறன் தலைமையில், மாவட்ட செயலாளர் சதிஸ்குமார் உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் அரசிடம் பேசி நல்ல ஒரு முடிவை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் திருட்டை தடுக்க இரவு நேரத்தில் ரோந்து பணியை போலீசார் அதிகப்படுத்த வேண்டும். நகர்ப்பகுதில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வேண்டும்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள தலைவர்களின் சிலைகளை புதுப்பித்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்பகுதியில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
சீரமைக்கப்படாத குளம்
குன்னம் தாலுகா, நல்லறிக்கை கிராம மக்கள் சார்பில் முரளி என்பவர் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தின் மையப்பகுதியில் பிளையார்குளம் உள்ளது. இந்த குளம் அருகே அரசு பள்ளியும் உள்ளது. குளம் சரியான பராமரிப்பு இல்லாததால் சுகாதாரமற்ற நிலையில் பாசி படர்ந்து, செடி, கொடிகள் வளர்ந்தும், ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்தும், தண்ணீர் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குளத்தின் அருகே சாலையும் உள்ளதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. குளத்தை சீரமைத்து அதனை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காடூர் ஊராட்சி மன்றம், போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கலெக்டர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 277 மனுக்கள் பெறப்பட்டன.