அரியலூர்
தனியறையில் நிற்க வைத்து 3 மணி நேரம் மிரட்டல் மயங்கி விழுந்த நர்ஸ்
|தனியறையில் நிற்க வைத்து மிரட்டியதால் நர்ஸ் மயங்கி விழுந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சேடக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வெண்ணிலா. இவர் செந்துறை அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம்போல நேற்று பணிக்கு வந்துள்ளார். சில நர்சுகள் சேர்ந்து புதிதாக பணிக்கு வந்த வெண்ணிலாவை தனியறையில் நீண்ட நேரம் நிற்கவைத்து, நாங்கள் தான் சீனியர், நாங்கள் சொல்வதைத்தான் செய்யவேண்டும் என்று சுமார் 3 மணி நேரம் மிரட்டியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் நின்று கொண்டே பதில் கூறிய நிலையில் வெண்ணிலா மயங்கி கீழே விழுந்தார். அப்போது டாக்டர்கள் இல்லாத நிலையில், அவர்களே வெண்ணிலாவிற்கு சிகிச்சை அளித்ததாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் விரைந்து வந்து வெண்ணிலாவை மீட்டு, தங்களது காரில் அழைத்து சென்று அரியலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் செந்துறை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.இதுகுறித்து தகவலறிந்த செந்துறை போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். செந்துறை மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், நர்சுகளே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை உள்ளது. எனவே போதிய டாக்டர்களை நியமித்து மருத்துவமனை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.