விழுப்புரம்
உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக உயரும்
|தமிழகத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக உயரும் என்று அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்துகொண்டு 18 அரசு பள்ளிகளை சேர்ந்த 3,034 மாணவ- மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
75 சதவீதமாக உயரும்
கிராமப்புற ஏழை, எளிய மக்கள், தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்களின் பிள்ளைகள் சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறைக்கு முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
அதுதான் திராவிட மாடல் ஆட்சி. பள்ளிப்படிப்பு படிக்கிற காலத்திலேயே சமுதாயத்தை பற்றி அறிந்துகொள்வதோடு பொது அறிவையும் வளர்த்துக்கொண்டால்தான் இந்திய ஆட்சிப்பணி போன்ற பணிகளை தேர்வு செய்து வெற்றி பெற முடியும்.
பெண்கள் கல்வி பயில வேண்டும், ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்காக லட்சக்கணக்கான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
75 சதவீதம் உயரும்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 53 சதவீதம்பேர் உயர்கல்வி படிக்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 75 சதவீதமாக உயரும். எல்லோரும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார், விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், வளவனூர் பேரூராட்சி தலைவர் மீனாட்சி ஜீவா, ஒன்றியக்குழு தலைவர்கள் சச்சிதானந்தம், வாசன், சங்கீதஅரசி ரவிதுரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், வளவனூர் நகர தி.மு.க. செயலாளர் ஜீவா, கோலியனூர் ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, வக்கீல் சுவைசுரேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அன்பரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.