திருச்சி
ஷேர் ஆட்டோக்களில் பெண் பயணிகளின் கூட்டம் குறைந்தது
|ஷேர் ஆட்டோக்களில் பெண் பயணிகளின் கூட்டம் குறைந்தது.
ஷேர் ஆட்டோக்கள்
திருச்சி மாநகரில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சத்திரம் பஸ் நிலையம், ஸ்ரீரங்கம், துவாக்குடி, துப்பாக்கி தொழிற்சாலை, உறையூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை, மாலை நேரங்களில் அனைத்து வழித்தடங்களில் செல்லும் பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். மாநகரில் பஸ் போக்குவரத்து குறைவான பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன.
உறையூர், கே.கே.நகர், எடமலைப்பட்டிபுதூர், கருமண்டபம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முறைப்படி அனுமதி பெற்று ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. குறிப்பிட்ட ஆட்களுக்கு மேல் ஏற்றக்கூடாது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கக்கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகள் ஷேர் ஆட்டோக்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
கட்டிட தொழிலாளர்கள்
திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதில் கல்லூரி மாணவர்கள், கட்டிட தொழிலாளர்கள் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகிறார்கள். திருச்சி மத்திய பஸ் நிலையத்தின் வெளிப்புற பகுதிகளில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் இந்த ஷேர் ஆட்டோக்கள் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும்போது பொதுமக்களுக்கு மிகவும் பயனளிக்கிறது.
திருச்சியில் ஷேர் ஆட்டோக்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.5 என இருந்த கட்டணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ரூ.10 ஆக உயர்த்தப்பட்டது. காலை, மாலை நேரங்களில் ஷேர் ஆட்டோக்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
விலை உயர்வு
இது குறித்து ஷேர்ஆட்டோ டிரைவர் கமல் கூறுகையில், "அதிகாலை முதல் ஷேர்ஆட்டோக்கள் இயங்க தொடங்கிவிடும். இரவு 10 மணி வரை பயணிகளை ஏற்றிச்செல்வோம். பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, ஏற முடியாமல் நிற்கும் பயணிகளை நாங்கள் ஏற்றிச்செல்வோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிகரித்துள்ளது. இதில் வாடகை, வாகனம் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளை கணக்கிடும்போது, ஒரு நபருக்கு ரூ.10 கட்டணம் என்பதை தவிர்க்க முடியாது" என்று கூறினார்.
ஜங்ஷன் பகுதியை சேர்ந்த செந்தில் கூறுகையில், "பெண்களுக்கு பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதித்ததால் ஷேர் ஆட்டோக்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. ஒரு சில பெண்களும் ஷேர் ஆட்டோக்களில் செல்லலாம் என்று ஏறி அமர்ந்து இருந்தாலும், அரசு பஸ், நிறுத்தத்தில் நிற்பதை கண்டால் இறங்கி சென்று விடுகிறார்கள். ஆனால் பஸ்களில் நாம் நினைத்த இடங்களில் இறங்க முடியாது. ஷேர்ஆட்டோவை பொறுத்தவரை நினைத்த இடத்தில் இறங்கி கொள்ளலாம். ஷேர் ஆட்டோவுக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயித்துள்ளதை இப்போதுள்ள விலைவாசி உயர்வை கணக்கிடும்போது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்" என்றார்.
கட்டணத்தை குறைக்கலாம்
எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜ்மல் கூறுகையில், "ஷேர்ஆட்டோக்களில் முன்பு ரூ.5 கட்டணமாக வசூலித்தார்கள். ஆனால் இப்போது ரூ.10 வாங்குகிறார்கள். பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள் செல்வதால் கட்டணத்தை சற்று குறைக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆட்களை ஏற்ற வேண்டும். கூடுதல் ஆட்களையும் ஏற்றக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என்றார்.
அவசரமாக செல்ல ஏற்றது
பாலக்கரையை சேர்ந்த தமிழ் கூறுகையில், "அவசரமாக செல்லும்போது ஷேர்ஆட்டோ வசதியாக இருக்கும். நீண்டநேரம் பஸ்சுக்காக காத்து இருக்கும்போது, ஷேர்ஆட்டோவின் முக்கியத்துவம் தெரியும். இப்போது ஷேர்ஆட்டோவில் ஒரு நிறுத்தத்தில் ஏறி கடைசி நிறுத்தத்தில் இறங்கினாலும் ரூ.10 தான் வசூலிக்கிறார்கள். ஆகையால் இது ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தான் உள்ளது" என்றார்.