சவுக்கு சங்கருக்கு அடுத்த ஷாக்! - சிறை அறை வாசலில் லஞ்ச ஒழிப்புத்துறை ஒட்டிய அதிரடி நோட்டீஸ்...
|கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பணிநீக்கம் செய்வதற்கான சோகாஷ் நோட்டீசை வழங்கினர்.
கடலூர்,
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் கடந்த 2003 ம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகு இவர் மீதான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதால் இதுவரையில் அவருக்கு அரசாங்கம் சம்பளமாக மாதம் 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜரான சவுக்கு சங்கரை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையில் கடலூர் மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிறையில் உள்ள சவுக்கு சங்கருக்கு பணிநீக்கம் செய்வதற்கான சோகாஷ் நோட்டீசை வழங்கினர். சிறைத்துறை அதிகாரிகளுடன் சென்று கொடுத்தபோது அவர் அதை வாங்க மறுத்துள்ளார். இதனால் அவர் உள்ள சிறையின் அறை வாசலில் அந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.