< Back
மாநில செய்திகள்
அடுத்த படம் மாரி செல்வராஜ் கூட தான்.. ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்..! - உதயநிதி

Image Courtacy: RedGiantMoviesTwitter

மாநில செய்திகள்

"அடுத்த படம் மாரி செல்வராஜ் கூட தான்.." ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ்..! - உதயநிதி

தினத்தந்தி
|
1 Jun 2023 10:31 PM IST

மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.



இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 'மாமன்னன்' படத்தில் நடிகர் வடிவேலுவின் மெல்லிய குரலில் முதல் பாடல் 'ராசா கண்ணு' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் துள்ளலான குரலில் வெளியாகி உள்ள 'ஜிகு ஜிகு ரெயில்' பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.



இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். மேலும் இயக்குநர் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, ஏஆர் ரகுமான், வடிவேலு, சிவ கார்த்திகேயன், சூரி, வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து இந்த விழாவில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், " மாரி செல்வராஜுக்கு இப்படி ஒரு மேடையை அளித்த உதயநிதி ஸ்டாலினிற்கு நன்றி. பரியேறும் பெருமாள் திரைப்படம் பண்ணும் போது எனக்கு பயம் இருந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. மாரி செல்வராஜின் கலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என எண்ணினேன். பரியேறும் பெருமாளின் வெற்றி தான் இவ்வளவு பெரிய வாய்ப்பை மாரி செல்வராஜிற்கு கொடுத்திருக்கிறது. நான் வடிவேலுவின் தீவிர ரசிகன். மாமன்னன் திரைப்படத்தின் சில காட்சிகளை என்னிடம் காட்டினார். மிகவும் சீரியஸாக இருக்கிறது, கொஞ்சம் காமெடியாக எடுத்து செல்லலாமே என்று கூறினேன். இத்திரைப்படத்தில் மிகமுக்கியமான அரசியலை மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார்" என்று அவர் கூறினார்.



உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் முதன்முறையாக நடிக்கிறேன். சொல்லப்போனால் இது என்னுடைய கடைசி படம். வடிவேலு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய குழுவுடன் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. மாரி செல்வராஜ் படங்களில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்தப் படத்திலும் இருக்கிறது. படத்தை ஜூன் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம். கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. அமைச்சர் பொறுப்பு கொடுத்த பின்பும் நான் போய் படங்களில் நடித்து வந்தால் அது சரியாக இருக்காது.

நிறைய வேலைகள் இருக்கிறது. பணிகள் இருக்கிறது. எதிர்பார்ப்பு கூடிக்கொண்டேயிருக்கிறது. பல்வேறு பணிச் சுமைகளுக்கு இடையே தான் படத்தின் டப்பிங், இசை வெளியீட்டு விழாவுக்கு நேரம் ஒதுக்கியிருக்கிறேன். எனக்கு தெரிந்து இதுதான் கடைசி படமாக இருக்கும். நல்ல படமாக அமைந்தது திருப்தி. நானும் மாரி செல்வராஜும் நிறைய பேசினோம். மாரி செல்வராஜின் அரசியல் இந்தப் படத்தில் அதிகமாக உள்ளது. அவருக்கும் எனக்குமான புரிதல் அதிகரித்துள்ளது.

அவரே கூட என்னிடம் அடுத்து நீங்கள் படம் நடித்தால் என் இயக்கத்தில் தான் நடிக்க வேண்டும் என்றார். அடுத்த 3 வருடத்திற்கு படம் கிடையாது. அதற்கு பின்பு தெரியவில்லை. அதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். நானும் மாரியிடம் அடுத்து படம் நடித்தால் உங்களுடன் தான் நடிப்பேன் என வாக்குறுதி கொடுத்துள்ளேன்" என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்