< Back
மாநில செய்திகள்
சிம்ஸ் பூங்காவில் நாளை மறுநாள் பழக்கண்காட்சி
நீலகிரி
மாநில செய்திகள்

சிம்ஸ் பூங்காவில் நாளை மறுநாள் பழக்கண்காட்சி

தினத்தந்தி
|
26 May 2022 6:58 PM IST

கோடை விழாவையொட்டி சிம்ஸ் பூங்காவில் நாளை மறுநாள் பழக்கண்காட்சி நடைபெறுகிறது. அங்கு அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

குன்னூர்

கோடை விழாவையொட்டி சிம்ஸ் பூங்காவில் நாளை மறுநாள் பழக்கண்காட்சி நடைபெறுகிறது. அங்கு அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

62-வது பழக்கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிலவுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை மகிழ்விக்க கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி போன்றவை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சியான குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக்கண்காட்சி நாளை மறுநாள்(சனிக்கிழமை) மற்றும் வருகிற 19-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.

22 அரங்குகள்

இதையொட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நீலகிரி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பழங்கள் மூலம் சிறப்பு அலங்காரங்கள் இடம் பெற உள்ளது. இதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத்துறை சார்பில் சிறப்பு அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 22 அரங்குகள் அமைக்கப்பட்டு, அதில் பல்வேறு வகையான அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

பழக்கண்காட்சியை முன்னிட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூங்காவில் 30-க்கும் மேற்பட்ட ரகங்களில் 3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அந்த செடிகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அதை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்