கடலூர்
புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை ஒரு வாரத்தில் சேதமடைந்த அவலம்
|மங்கலம்பேட்டை அருகே புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை ஒரு வாரத்தில் சேதமடைந்தது. இது தொடர்பான வீடியோ சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அடுத்த ரூபநாராயணநல்லூர் கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் கடந்த வாரம் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சாலையில் ஆங்காங்கே ஜல்லிகற்கள் பெயர்ந்து வந்தன. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த சிலர் சாலையை கைகளால் தோண்டி பார்த்தனர். அப்போது சாலை பெயர்ந்து கையில் வந்தது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் சாலை ஒரு வாரத்திலேயே சேதமடைந்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ரூபாய் பல லட்சம் செலவில் எங்களது தெருவில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் தார் சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதால் தற்போது அவை சேதமடைந்து வருகிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் ஆகும். எனவே வரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
மேலும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலையை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனிடையே சாலை பெயர்ந்து வருவது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.