திருநெல்வேலி
பாளையங்கோட்டை மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய கட்டுமான பணியை தொடங்க வேண்டும்
|பாளையங்கோட்டை மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என்று மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
பாளையங்கோட்டை மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு புதிய கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என்று மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் வலியுறுத்தினார்கள்.
இடிக்கும் பணி
நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட்டை முழுமையாக இடித்து விட்டு ரூ.40 கோடி செலவில் புதிய மார்க்கெட் வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள வியாபாரிகளுக்கு அருகில் உள்ள ஜவஹர் மைதானம் மற்றும் பழைய போலீஸ் குடியிருப்பு இடத்தில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் காந்தி மார்க்கெட் கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு ஏற்கனவே அங்கிருந்த ஒருசில கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து நேற்று மார்க்கெட்டில் உள்ள கழிவறை மற்றும் குளியல் அறை தொட்டிகள் பொக்லைன் எந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது.
வியாபாரிகள் மனு
இதற்கிடையே காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் சாலமோன், பொதுச் செயலாளர் பெரியபெருமாள், பொருளாளர் இசக்கி, துணை பொதுச் செயலாளர் மோகன்ராஜ் மற்றும் வியாபாரிகள் நெல்லை மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறிஇருப்பதாவது:-
தரைத்தளம் -மின் இணைப்பு
பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட மகாத்மா காந்தி தினசரி சந்தையை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிய கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். இந்த நிலையில் 7 நாட்களுக்குள் கடைகளை காலி செய்து புதிய கடைகளுக்கு செல்லுமாறு அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.
பழைய காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள தற்காலிக கடைகளில் தரைத்தளம் மற்றும் மின் இணைப்பு, ஒயரிங் வேலையை வியாபாரிகள் சொந்த செலவில் பார்க்க வேண்டி உள்ளது. ஒரே நேரத்தில் இந்த வேலைகளை செய்ய ஆட்கள் இல்லை. மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என அடித்தடுத்து பண்டிகை காலமாக இருப்பதால் தற்காலிக கடைகளில் உள் வேலைகள் செய்ய கூடுதல் நாட்கள் ஆகும்.
புதிய கட்டுமான பணி
எனவே பொங்கல் பண்டிகை வரை கடைகளை காலி செய்வதற்கும், புதிய தற்காலிக கடைகளுக்கு செல்வதற்கும் கால அவகாசம் வழங்க வேண்டும். வருகிற ஜனவரி மாதம் 18-ந் தேதி தற்போது உள்ள கடைகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்கிறோம். அதன் பிறகு புதிய கட்டுமான பணியை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிஉள்ளனர்.