போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
|தி.மு.க அரசு இனியும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் ஆற்றுவார்கள்.
சென்னை,
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தால் பேரழிவை நோக்கி பயணிக்கும் இளைஞர் சமுதாயம் - போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை ஆவடி அருகே மாநகர அரசுப் பேருந்து ஒன்றில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார்20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த பத்து நாட்களில் மட்டும் கடலூர், திருப்பூர், நாமக்கல், திண்டிவனம் என தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் போதை மாத்திரைகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள், அதனை கட்டுப்படுத்த தவறிய தமிழக காவல்துறையின் மெத்தனப் போக்கை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
ஏற்கனவே, தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொடியவகை போதைப் பொருட்களின் நடமாட்டம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை முற்றிலுமாக சிதைக்கும் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகளின் விற்பனையை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவாக குற்றச் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
எனவே, தமிழகத்தில் போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரை விற்பனை தொடர்பான புகார்களில் தி.மு.க அரசு இனியும் அலட்சியப் போக்குடன் செயல்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் ஆற்றுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.