மாணவ, மாணவியருக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
|அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவியருக்கு தேவையான உபகரணங்களை வழங்காத தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி என்னும் வற்றாத செல்வம் தனி மனிதன் வாழ்க்கையை வளம் பெறச் செய்யவும், அவன் சார்ந்த சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைகிறது. பொருளாதார வளர்ச்சி அடைவது மட்டுமின்றி, வாழ்க்கையில் பல்வேறு நலன்களையும் முழுமையாகப் பெறுவதற்கு கல்வி இன்றியமையாதது ஆகிறது.
இத்தகைய பயன்மிக்க கல்வியை தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு கட்டணமில்லாமல் அளித்ததோடு, விலையில்லா புத்தகங்கள், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், சீருடைகள், புத்தகப் பை, கிரேயான்ஸ், அட்லஸ், கலர் பென்சில் என பலவற்றை அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு பள்ளிகள் துவங்கிய நாளன்றே வழங்கிய பெருமைக்குரியவர் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். ஆனால், இன்று தி.மு.க. ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள், கோடை வெயில் காரணமாக ஜூன் 12-ஆம் தேதி திறந்த நிலையிலும், பாடப் புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் தவிர வேறு ஏதும் வழங்கப்படவில்லை என்றும், சில பள்ளிகளில் பாடப் புத்தகங்கள்கூட தரப்படவில்லையென்றும், மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் மட்டும் ஒன்றிரண்டு பேருக்கு கொடுக்கப்பட்டு அதற்கான புகைப்படம் எடுக்கப்பட்டது என்றும் செய்திகள் வருகின்றன. நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு சென்று திரும்பிய குழந்தைகள் காலில் செருப்பு அணியாமல் சென்றதையும், கிழிந்த புத்தகப் பையுடன் சென்றதையும் காண முடிந்தது.
சில பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பாடப் புத்தகங்கள் இன்னும் சில நாட்களில் பள்ளிகளை வந்தடையும் என்றும், அதற்குப் பின்னர்தான் பிற உபகரணங்கள் அளிக்கப்படும் என்றும் தெரிவிப்பதாக மாணவ, மாணவியர் தெரிவிக்கின்றனர். பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இதர உபகரணங்களை மாணவ, மாணவியருக்கு உடனுக்குடன் அளிக்காதது அவர்களுடைய படிப்பில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு, படிப்பில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தை குறைக்கும். மேலும், கிராமப் பகுதிகளிலிருந்தும், மலைப் பகுதிகளிலிருந்தும் கோடை வெயிலில் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு காலணிகள் வழங்கப்பட வேண்டியது மிக மிக அவசியம்.
ஏனென்று சொன்னால், அவர்களிடம் இவற்றை வாங்குவதற்குத் தேவையான வசதி இல்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் காலணி இல்லாமல் நடப்பது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலணி உட்பட இதர வகை பொருட்களை உடனடியாக அளிக்கப்படாதது என்பது சமூக அநீதியாகும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு தரமான கல்வி கிடைக்கச் செய்வதையும், அவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பொருட்கள் உடனுக்குடன் சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.
எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உடனடியாக பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, புத்தகப் பை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் உடனடியாக வழங்க ஆவன செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.