< Back
மாநில செய்திகள்
நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்
கடலூர்
மாநில செய்திகள்

நடராஜர் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்

தினத்தந்தி
|
7 Sept 2023 12:50 AM IST

தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.

சிதம்பரம்,

மக்கள் நலக்குழு சார்பில் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரக்கோரி பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு மக்கள் நலக்குழுவின் தலைவர் சந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சி துணை பொது செயலாளர் மோகன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் எடுத்து சிறப்பாக செயல்படுத்தி வந்தார். அதனை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிமன்றத்திற்கு சென்றனர். அப்போது தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்பட்டது.

தற்போது மீண்டும் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது சாதாரண தொடக்கம் தான்.

தீட்சிதர்கள் கோவிலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதற்கு உதாரணம், கோவிலில் ஆண்டுக்கு ரூ.37 ஆயிரத்து 199 மட்டுமே வருமானம் என்றும், இதில் செலவு 37 ஆயிரம் எனவும், மீதி 199 ரூபாய் தான் என நீதிமன்றத்தில் கணக்கு கொடுத்துள்ளனர்.

சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்

ஆனால் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் எடுத்து நிர்வகித்தபோது குறுகிய காலத்தில் கோடிகணக்கில் உண்டியல் மூலம் வருமானம் கிடைத்தது. இந்த கோவில் தீட்சிதர்களுக்கு தனி உரிமை பெற்றது என்பது துளி அளவும் உண்மை கிடையாது. எனவே தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றி நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையில் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு மணிவாசகம், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் எழுதிய சிதம்பரம் நடராஜர் கோவில் தனித்த மத உட்பிரிவு கோவிலா? என்கிற தமிழ், ஆங்கில புத்தகம் மற்றும் கி.வீரமணி எழுதிய சிதம்பரம் ரகசியம் என்கிற புத்தகமும் வெளியிடப்பட்டன.

முடிவில் திராவிடர் கழக சொற்பொழிவாளர் யாழ்திலீபன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்