அரியலூர்
கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
|கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அரியலூர் மாவட்டம்
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து அரியலூர் கொல்லாபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 2 மாவட்டங்களில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம். கங்கையை வென்ற முதலாம் ராஜேந்திர சோழன் இங்கே கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினான். தனது ஆட்சிக் காலத்தில் தலைநகரை தஞ்சையில் இருந்து இந்த சோழபுரத்துக்கு மாற்றினான். தமிழ் காக்க, தமிழர் தம் நலம் காக்க, டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றி கல்லக்குடி என்று பெயர் சூட்டுவதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து, கல்லக்குடி கொண்டானாக படுத்து, தமிழ்க்குடி தொண்டனாக எழுந்த நமது கலைஞரை தலைவராக எழ வைத்த மாவட்டம் தான் இந்த அரியலூர் மாவட்டம்.
எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள்
கலிங்க சிற்பங்கள், மாளிகை மேடு, யானை சுதை சிற்பம், இரட்டை கோவில் என்று அரியலூர் மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் என்ற புதிய மாவட்டத்தை 2007-ஆம் ஆண்டு நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் தான் உருவாக்கினார். அரியலூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கப்பெறும் புதைபடிவங்கள் கொண்டு அருங்காட்சியகம் ஒன்று வாரணவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி மதிப்பிலான புதைபடிவப் பூங்கா அமைப்பதற்காகவும், வாரணவாசி அருங்காட்சியகத்தின் பாதுகாப்பிற்காகவும் சுற்றுச்சுவர் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெறுகின்றது. வாரணவாசி கிராமத்தில் உள்ள 120 ஏக்கர் நிலப்பகுதியினை (களர் நிலப்பரப்பு) பாதுகாத்திட, பாதுகாப்புக் கொள்கை வெளியிட தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டினுடைய வரலாற்றுக் கருவூலமான அரியலூரில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு, அகழ்வாராய்ச்சி பணிகளுக்கென 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் வாயிலாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழினுடைய தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கியிருக்கிறோம்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம்
நேற்று (அதாவது நேற்று முன்தினம்) கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரக்கூடிய அகழாய்வு பணிகளை எல்லாம் நாங்கள் நேரடியாக சென்று பார்வையிட்டோம். கங்கைகொண்ட சோழன், மும்முடி சோழன், உத்தம சோழன், பண்டித சோழன், வீரசோழன் போன்ற பட்டங்களுக்கு சொந்தக்காரரான சோழ மாமன்னர் ராஜேந்திர சோழன். தெற்காசிய நாடுகளை வென்று, அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்.
தனது ஆட்சி காலத்தில் பல நாடுகளை கடல் கடந்து சென்று வென்றதோடு, கிழக்கிந்தியத் தீவுகள், சீனா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் கொண்டிருந்தவர். இத்தகைய பெருமை வாய்ந்த மாமன்னர் ராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில், கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும் சிறந்த வணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும், உலகுக்கு பறைசாற்றும் வகையில், நான் நேற்று பார்த்து, கண்டு வியந்தேன். அதைப்போல் மக்கள் அனைவரும் காண வேண்டும் என்பதற்காக கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சி பொங்க நான் அறிவிக்கின்றேன்.
சதயவிழா
சில மாதங்களுக்கு முன்பே, தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்படுவதைப்போல, மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு அரசு விழா கொண்டாடப்பட வேண்டும் என்பது அரியலூர் மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடைய நீண்ட கால கோரிக்கையை ஏற்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட ஆணையிடப்பட்டதையும் நான் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
புவியியல் புதைபடிவ பூங்கா
அதேபோல் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டப் பகுதியில் 10 கோடி ரூபாய் செலவில் புவியியல் புதைபடிவப் பூங்காவும் அமையப் போகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ேபசினார்.