தூத்துக்குடியை உலுக்கிய புதுமணத் தம்பதி படுகொலை.. பெண்ணின் தந்தை கைது
|கொலை வழக்கில் தொடர்புடைய உறவினர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் மாரிசெல்வம் என்ற இளைஞரும் கார்த்திகா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திருமணமான 3 நாட்களில் நேற்று வீடு புகுந்து கும்பல் ஓன்று புதுமண தம்பதிகள் இருவரையும் சரமாரி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மகும்பலை 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் புதுமணத் தம்பதி கொலை வழக்கில் பெண்ணின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தந்தை முத்துராமலிங்கத்தை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய உறவினர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களையும் தேடி வருகின்றனர்.