அரியலூர்
பெரியாத்துக்குறிச்சி கிராமத்தில் மீண்டும் புலிகள் நடமாட்டம்?
|பெரியாத்துக்குறிச்சி கிராமத்தில் மீண்டும் புலிகள் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததின் பேரில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் கடந்த 9-ந்தேதி 2 புலிகள் நடமாட்டம் இருப்பதாக கிராம மக்களிடையே பரவிய தகவலின் படி வனத்துறை, போலீசார் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து புலிகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட பகுதியில் கூட்டு தணிக்கை மேற்கொண்டனர். சந்தேகத்திற்குரிய விலங்கின் காலடி தடங்களை பார்வையிட்ட அவர்கள் பின்னர் இரவும், பகலும் அப்பகுதியில் ரோந்து மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அப்பகுதியில் மீண்டும் புலிகள் நடமாட்டம் உள்ளதாக சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தகவல்கள் கிடைக்க பெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வனத்துறை மூலம் தேடுதல் மற்றும் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே சுற்றுப்புற கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியே செல்வதை தவிர்த்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இச்சூழ்நிலையை பயன்படுத்தி தேவையற்ற வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான தகவல்களை 6385285485 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.