கடலூர்
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீட்டுக்குள் புகுந்தது
|நெல்லிக்குப்பம் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீட்டுக்குள் புகுந்தது.
நெல்லிக்குப்பம்
கடலூரில் நேற்று காலை சில்வர் கடற்கரையில் நடந்த பன் ஸ்ட்ரீட் விழாவிற்கு சென்று விட்டு அதே உற்சாகத்துடன் கடலூரில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 5 வாலிபர்கள் பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். நெல்லிக்குப்பத்தை அடுத்த வரக்கால்பட்டு பகுதியில் உள்ள வேக தடையில் ஏறி இறங்கிய போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் திடீரென்று தவறி சாலையில் விழுந்தனர். ஆனால் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஓடி எதிர் புறம் உள்ள வீட்டுக்குள் புகுந்து சுவரில் மோதி பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது.
மேலும் இவர்களுக்கு பின்னால் இன்னொரு மோட்டார் சைக்கிள் வந்த 2 பேரும் விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மீது மோதி விடாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்தபோது நிலை தடுமாறி இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.