விறகு சேகரிக்க சென்ற தாய் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு... தேடி சென்ற மகனும் இறந்த பரிதாபம்
|குன்னூர் அருகே விறகு சேகரிக்க சென்றபோது மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார். அவரை தேடி சென்ற மகனும் மின்சாரம் தாக்கி இறந்தார்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் மெஹ்ரூன் (70 வயது). இவரது மகன்கள் பைரோஸ் (45 வயது), முபாரக். பைரோஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே கடந்த 5-ந் தேதி மெஹ்ரூன் விறகு சேகரிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள வனப்பகுதிக்கு நடந்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பைரோஸ், முபாரக் மற்றும் ஊர் மக்கள் மெஹ்ரூனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் காட்டேரி அருகே புதர்கள் உள்ள இடத்தில் தேடிய போது, அங்கு மெஹ்ரூன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதை பார்த்த பைரோஸ் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அதோடு அருகே சென்று தாயை தூக்கி உள்ளார்.
அப்போது புதரில் அறுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியில் பைரோஸ் மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே பைரோஸ் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பைரோஸ் இறந்தார். மேலும் மெஹ்ரூன் உடல் அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரும் மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து குன்னூர் நகர போலீசார் விசாரணை நடத்தியதில், உயரழுத்த மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அங்கு சென்றதால் மெஹ்ரூன் மின்சாரம் தாக்கி இறந்ததும், அவரை தேடி சென்ற மகனை மின்சாரம் தாக்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார், மின்வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அறுந்த மின் கம்பியை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.