< Back
மாநில செய்திகள்
குழந்தையுடன் பெண்ணை பாதி வழியில் இறக்கி விட்ட தாய் சேய் வாகனம் - பொதுமக்கள் அதிர்ச்சி...!
மாநில செய்திகள்

குழந்தையுடன் பெண்ணை பாதி வழியில் இறக்கி விட்ட தாய் சேய் வாகனம் - பொதுமக்கள் அதிர்ச்சி...!

தினத்தந்தி
|
14 Sept 2022 8:52 PM IST

தேன்கனிக்கோட்டை அருகே தாய், சேய் வாகனத்தில் சென்ற பெண் குழந்தையுடன் பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கொடகரை கிராமத்தை சேர்ந்தவர் மாதன். இவருடைய மனைவி புட்டம்மா (வயது 25). இவருக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

அவருக்கு கடந்த 10-ம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நேற்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு தாய், சேய் வாகனத்தில் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவரை ஊரில் சென்று இறக்கி விடாமல் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவர் இறக்கிவிட்டு சென்றுள்ளார்.

அங்கிருந்து கொடகரை கிராமத்திற்கு செல்ல 20 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். பஸ் வசதியும் இல்லாததால் எப்படி குழந்தை மற்றும் தன்னுடன் வந்த உறவினருடன் ஊருக்கு செல்வது என தெரியாமல் புட்டம்மா குழப்பத்தில் இருந்தார். இது குறித்து கொடகரை கிராமத்தை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரின் உத்தரவை தொடர்ந்து பாதியில் இறக்கிவிட்டு சென்ற வாகனத்திலேயே அந்த பெண் தனது கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்