சென்னை
மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு
|சிங்கப்பெருமாள் கோவிலில் மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி ஜெ.ஜெ. நகர், எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவர், மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (வயது 35). இவர்களுடைய மகன்கள் ஜெய்கணேஷ் (15), தருண் (12).
இவர்களில் ஜெய்கணேஷ், சிங்கப்பெருமாள் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்து விட்டு டிப்ளமோவில் சேர கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார். தருண் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் ஜெய்கணேஷ் தனது வீட்டின் அருகே சகோதரருடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெய்கணேஷ் தவறி கீழே விழுந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ஜெய்கணேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் ஆம்புலன்சு மூலம் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. மகனின் உடலை பார்த்த தாய் சாந்தி, கதறி அழுதபடி மகனை கட்டித்தழுவினார். அப்போது அதிர்ச்சியில் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர், சாந்தி மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் தாய், மகன் இருவரது உடல்களையும் சிங்கப்பெருமாள் சுடுகாட்டில் ஒன்றாக வைத்து எரியூட்டினர். மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
உயிரிழந்த ஜெய்கணேஷ் 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 463 மதிப்பெண்கள் எடுத்து தாம் படித்த பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.